கொரோனோ நோய் குறித்த அச்சமின்றி ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் மக்கள் கூடுவதாகவும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சார் ஆட்சியரின் உத்தரவின்பேரில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக மூன்று இடங்களில் காய்கறி சந்தை பிரித்து நடத்த அனுமதியளிக்கப்பட்டு சந்தை நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக தற்காலிக மதிய நேர மார்க்கெட்டாக பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் மார்க்கெட்டிலிருந்து தான் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு காய்கறிகள் தினமும் அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மார்க்கெட்டில் சென்னை சென்று வரும் வியாபாரிகள், ஓட்டுனர்கள் என யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட இந்த மார்க்கெட் முழுவதும் கோயம்பேடு மார்க்கெட்டைப்போல பரவும் அபாயம் உள்ளது.
இதனை சற்றும் உணராத பொதுமக்கள், வியாபாரிகள், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏலம் விடுவது, காய்கறிகளை வாங்குவது என சற்றும் நோய்குறித்த அச்சமின்றி அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மேலும் நகராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்வதில்லை எனவும் உடனடியாக இந்த மார்க்கெட் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஒட்டன்சத்திரத்தில் கோயம்பேட்டிலிருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.