குழந்தையை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தாய் துளசியை, மனநல பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஒன்றரை வயது குழந்தையை, பெற்ற தாயே கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. காண்போரை பதற வைத்த அந்தக் காட்சிகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மோட்டூரைச் சேர்ந்த துளசி என்பவர்தான் குழந்தையை சித்திரவதை செய்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது. துளசிக்கும் கணவர் வடிவழகனுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சத்தியமங்கலம் காவல் துறையினர் துளசி மீது சிறார் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
s
மேலும் ஆந்திரா விரைந்த காவல்துறையினர் சித்தூரில் துளசியைக் கைது செய்து, இன்று காலை சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் 2 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர். துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவருக்கு மனநல பரிசோதனை நடத்துவதற்காக, விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் துளசியை ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். இதனிடையே, மிஸ்டு காலில் அறிமுகமாகி துளசியுடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பேசி பழகி வந்ததாக ஆண் நண்பர் பிரேம்குமாரை கைது செய்ய, தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர்.