திருச்சி வீரப்பூர் பூசாரிபட்டியில் கன்னிமாரம்மன் உள்ளிட்ட கோயில்கள் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் அமர்வு போராட்டம் நடத்தினர். பெண்கள் தாசில்தாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தென்னூர் பகுதியில் மருத்துவமனை, வழிபாட்டு தளங்கள் அருகே உள்ள டாஸ்மாக் கடை மீதும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மூடக்கோரி போராட்டம் நடத்தின.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் வீரப்பூர் பூசாரிபட்டியில், கன்னிமாரம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ள பகுதியில், டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இக்கடையை அகற்றவேண்டுமென அப்பகுதி மக்கள், அதன்முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தவந்த தாசில்தாரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், திருச்சி மாநகரம் தென்னூர் பகுதியில், மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள இடத்திலும், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அதனை மூடக்கோரி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்டஅமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி - சந்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, அப்பகுதிமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டுவந்த 2 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்ட நிலையில், அந்நகரின் புறவழிச்சாலையில் புதிய கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து, அப்பகுதி மக்கள் பெயரில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.