தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வீதியில் இறங்கிய தமிழக விவசாயிகள்

webteam

விழுப்புரம் தொடங்கி நாகை மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தின் முக்கியமான பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், அதுதொடர்பான சில படங்கள் வெளியாகியுள்ளது. நடவுக்காக தயார் நிலையில் உள்ள வயல்கள், நடவு முடிந்து சில நாட்களே ஆன நிலையில் உள்ள வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் குறுக்கும் நெடுக்குமான செல்வது போன்று அந்தப் படங்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை செம்பனார்கோவில் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெறும் போது எடுக்கப்பட்ட படங்கள் அவை. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட உள்ளன. 

அந்த ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில், நாகை மாவட்டம் வேதாரண்யம் கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுவை எடுக்க உள்ளது. அதற்காக சில இடங்களில் முதற்கட்ட பணிகளை வேதாந்தா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தப் பணிகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளதால் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் போராட்டங்கள்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் கிழக்கு கடற்கரையோரம் மரக்காணம், கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக கிணறுகள் தோண்டப்பட உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்:

கரியாப்பட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிடக்கோரி வேதாரண்யம் தாலுகா முழுவதும் முழுக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரியாப்பட்டினம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை, மன்னார்குடி:

மன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி பகுதிகளில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி தொடர் போராட்டங்களை நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கட்சிகள், அமைப்புகள் போராட்டம் அறிவிப்பு: 

விவசாயிகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் எதிர்ப்போம் என ஆளும் அதிமுக ஏற்கனவே தெரிவித்தது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் முதல் திருவாரூர் வரை மனிதச் சங்கிலி பிரச்சாரம் செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.