தமிழ்நாடு

ஐஐடி வளாகம் முற்றுகை: போலீசார் மாணவர்களிடையே தள்ளுமுள்ளு!

ஐஐடி வளாகம் முற்றுகை: போலீசார் மாணவர்களிடையே தள்ளுமுள்ளு!

Rasus

மாட்டிறைச்சி விவகாரத்தில் ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவ முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. சென்னை ஐஐடியிலும் மாட்டுக்கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவுக்கு ஏற்பாடு செய்த சூரஜ் என்கிற மாணவரை சில குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தாக்கினர். முகநூலில் குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தனியாக பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் ஆட்களை சேர்த்து சுரஜ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வலது கண்ணில் பலத்த காயம் அடைந்துள்ள மாணவர் சூரஜ் அப்போலோ மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மணிஷ்குமார் சிங் உள்ளிட்ட 8 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போலீசாருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. மாணவ அமைப்பினர் போராட்டத்தை தொடர்ந்ததால் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐஐடி டீன் அழைப்பு விடுத்துள்ளார்.