தமிழ்நாடு

’சொத்துவரியை உயர்த்திய திமுக அரசை எதிர்த்து ஏப்.5ம் தேதி ஆர்ப்பாட்டம்’ - அதிமுக அறிவிப்பு

Veeramani

சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் வரும் 5 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், " அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற புரட்சிகரமான திட்டங்களையெல்லாம் ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்துவரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.



சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்த திமுக, தற்போது 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற பச்சை துரோகம் ஆகும்.



கொரோனா பாதிப்பு, விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, வருமானம் குறைவு என்ற பன்முனை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படும் நகர்ப்புற மக்களின் தலையில் சொத்துவரி என்ற சம்மட்டியால் அடித்து மக்களை நிலைகுலைய செய்திருக்கிறது திமுக அரசு. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது