தமிழ்நாடு

களையிழந்த பாலமேடு... ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடையடைப்பு

களையிழந்த பாலமேடு... ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடையடைப்பு

webteam

மதுரை பாலமேட்டில் வழக்கமாக ஆண்டுதோறும் இன்றைய தினம் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காததால் கிராமமே களையிழந்து காணப்படுகிறது.

ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாயும் வாடிவாசல் பகுதி போராட்டக்களமாக மாறியுள்ளது‌. பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரப்படாததைக் கண்டிக்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. வாடிவா‌சல் முன்பு, காளைகளுடன் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு, பீட்டா அமைப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, கயிறு அவிழ்த்து விடப்படாமலே, திடீரென ஒரு சில காளைகள் மிரண்டு ‌ஓடின.

பதற்றம் அதிகரித்ததால், அங்கு கூடியிருந்த மக்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். அதனைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாடிவாசல் பகுதிக்குச் சென்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். வாடிவாசல் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான காவல்‌துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாலமேட்டைச் சுற்றிலும் 15 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பாலமேட்டில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. எந்தவொரு வடிவத்திலும் ஜல்லிக்கட்டை நடத்த முயற்சிக்க மாட்டோம் என்று காளை வளர்ப்போரிடம் எழுத்துப்பூர்வமாக காவல்துறையினர் வாக்குறுதி பெற்றுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.