தமிழ்நாடு

”ரூ.2000 உதவித்தொகை வழங்குக” - மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம் அறிவிப்பு

webteam
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவேண்டிய இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகையை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தலைவர் வில்சன் தலைமையில நடந்த மாநிலக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மாநிலப்பொது செயலாளர் ஜான்சிராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
"தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறை சார்பில் வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகைக்காக ஏராளமான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மெத்தனமாக உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து வருகிற ஜனவரி 24ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நூறுநாள் வேலைத்திட்டத்தில் நூறுநாட்கள் முழுமையாக பணி தருவதில்லை. இந்த ஆண்டிற்கான நூறுநாள் வேலைத்திட்டம் வரும் மார்ச் மாதத்துடன் முடியவுள்ள நிலையில், 100 நாட்கள் பணி தரவேண்டிய நிலையில் தற்போது முப்பது முதல் நாற்பது நாட்கள் மட்டுமே பணி தந்துள்ளனர். எனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக நம்பி உள்ள மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். நான்கு மணிநேரம் செய்யவேண்டிய வேலைக்கு பதிலாக நாள்முழுவதும் காத்திருக்க வைக்கின்றனர்” எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
பிப்ரவரி 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா, மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.