தமிழ்நாடு

தடையை மீறி போராட்டம் அறிவிப்பு.. சென்னையில் பலத்த பாதுகாப்பு

Rasus

தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் தலைமைச் செயலகம் அருகே இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ள நிலையில் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மார்ச் 11 வரை சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் திட்டமிட்டப்படி இன்று போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. எதிர்மனுதாரராக தங்களை சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றத்தின் தடை தங்களுக்கு பொருந்தாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தடையை மீறி இஸ்லாமிய அமைப்பினர் தலைமைச் செயலகம் அருகே இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ள நிலையில் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம் பகுதியில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்றிரவு ஆய்வு செய்தார். இதன் பின் பேசிய அவர், சென்னையில் 10 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் இவர்களில் 2 ஆயிரம் பேர் தலைமைச் செயலகம் அருகே நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தடையை மீறி பேரணி செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் அதை மீறிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஆணையர் தெரிவித்தார். சென்னை தவிர பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கி இன்று முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.