தமிழ்நாடு

பாலியல் புகார் ஆசிரியரை விடுவிக்க மாணவர்கள் போராட்டம்

webteam

சேலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க வலியுறுத்தி சக ஆசிரியர்களும், மாணவ மாணவியரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மெய்யனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சதீஷ். இவர் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டி, அச்சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் ஆசிரியர் சதீஷை பள்ளிக்கு வெளியே சரமாரியாக அடித்து உதைத்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். 

இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ் குற்றமற்றவர், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒருசிலர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஆசிரியர்கள், முறையான விசாரணை நடத்தாமல் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்தனர்.

ஆசிரியர் சதீஷை விடுவிக்கும் வரையில் தொடர்ந்து போராடுவோம் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். சதீஷ் சொல்லிக் கொடுப்பதிலும், நடவடிக்கையிலும் சிறந்தவர் என்று மாணவியரும் தெரிவிக்கின்றனர். பெற்றோர் மட்டுமன்றி மேலும் சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாக ஆசிரியர் சதீஷ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.