தமிழ்நாடு

மேகதாது அணைக்கு எதிராக போராட்டம்: பிரேமலதா, விஜயபிரபாகரன் உள்ளிட்ட 349 பேர் மீது வழக்கு

மேகதாது அணைக்கு எதிராக போராட்டம்: பிரேமலதா, விஜயபிரபாகரன் உள்ளிட்ட 349 பேர் மீது வழக்கு

Veeramani

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட 349 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் கர்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சியை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழக எல்லை நகரான ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பாகவும் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல இந்த அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி மறுத்து அணை கட்ட முயற்சிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மினி டிராக்டரை தானே ஒட்டி வந்து பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மத்தியிலும் கர்நாடக மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பிஜேபி அரசு தமிழகத்திற்கு விரோதமாக அணை கட்டியே தீருவோம் என்ற முடிவை வன்மையாக கண்டிக்கிறோம். இரு மாநிலத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகி வரும் நிலையில் பிடிவாத போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும், இல்லை என்றால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு கர்நாடக மாநிலம் ஆளாக நேரிடும்என எச்சரிக்கை விடுத்தார்.