இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் போராட்டத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசைஞானி இளையராஜா, “ உலகத்திலேயே தோன்றிய ஞானிகளில் பகவான் ரமண மகிரிஷியை போல வேறு ஒருவர் கிடையாது. இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என சொல்வார்கள். அடிக்கடி டாக்குமென்டரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிரித்தெழுந்து வந்தார் என நிரூபணமாகவில்லை என சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்தெழுதல் நடந்தது ஒரே ஒருவருக்குத்தான். அது பகவான் ரமண மகரிஷிக்கு மட்டும்தான். உலகத்திலேயே அவருக்கு மட்டும் உயிரித்தெழுதல் நடைபெற்றிருக்கிறது. அதுவும் அவரின் 16 வயதில்” என்றார்.
இதனிடையே இளையராஜாவின் பேச்சு கிறிஸ்துவத்தையும் அதன் ஆணி வேரான மத நம்பிக்கயையும் கொச்சைப்படுத்தி, ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி இன்று இளையராஜா வீடு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் அறிவித்தனர். மேலும் இளையராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதன்படி சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீடு அமைந்துள்ள முருகேசன் தெருவிற்கு சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் இன்று வந்தனர். ஆனால் அவர்களின் முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து சென்னை தி.நகர் மேம்பாலம் அருகே முற்றுகையில் ஈடுபட சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் முயன்றனர். ஆனால் போராட்டம் தொடங்க இருந்த நேரத்தில் அங்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் ‘உங்களது பெயர் என்ன’ என கேட்டுவிட்டு உடனடியாக ‘ You are Under Arrest ’ என தெரிவித்தனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் போராட்டத்திற்கு முன்பே கைது செய்யப்பட்டனர். முற்றுகை போராட்டத்திற்காக ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். அவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போராட்டத்திற்கு வந்த சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் தி.நகரில் உள்ள திருமண மண்படத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.