தமிழ்நாடு

“தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்காததால் மாணவரை நீக்கம் செய்தோம்” - சென்னை பல்கலைக்கழகம் 

webteam

தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்காததால் மாணவரை நீக்கம் செய்தோம் என சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார். 

கிருபா மோகன் என்ற மாணவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதையடுத்து அதே பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) படிக்க கடந்த ஜூலை 31-ஆம் தேதி அட்மிஷன் போட்டுள்ளார். இந்நிலையில், ஒரு மாதம் வகுப்புகளில் கலந்துக்கொண்ட பிறகு அம்மாணவரை நீக்கம் செய்து துறைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் தீவிரமாக இயங்கியதாலேயே தான் நீக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதி கூறும்போது, தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்பதால்தான் அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். மேலும் “மாணவரிடம் தகுதிச் சான்றிதழ் வழங்குமாறு பல்கலைக்கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. பல்கலைக்கழக விதிகளின் படியே அனைத்து துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். 

ஆனால் மாணவரின் சேர்க்கையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “கிருபாகரன் சேரும்போது அவரிடம் தகுதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகம் கூறவில்லை. அவர் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தில் செயல்படுவதாலேயே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என குற்றம்சாட்டினர்.