தமிழ்நாடு

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களை தடை செய்க - நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்

webteam

அமேசான், ஃப்ளிப்கார்ட் வால்மார்ட், நிறுவனங்களை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது என்ன வேண்டுமானாலும் வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அதில் மிகவும் பிரபலமாகியிருப்பது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் என்றால் அது மிகையல்ல. 

இந்நிலையில், அமேசான், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தியும் இந்த நிறுவனங்களால் சிறு குறு வணிகர்கள், ஏஜென்சிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முன்பு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் உடனே இந்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் எனவும் விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை வணிகர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.