தமிழ்நாடு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்..! - எந்தெந்த திட்டங்களுக்கு அனுமதியில்லை ?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்..! - எந்தெந்த திட்டங்களுக்கு அனுமதியில்லை ?

webteam

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‌அறிவிக்கப்பட்டுள்ளன? அங்கு இனி எந்தெந்த திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலத்தில் இடம்பெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள் சிறப்பு மண்டலத்திற்குள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கறம்பக்குடி வட்டாரங்களும் வேளாண் சிறப்பு மண்டலத்திற்குள் வருகின்றன.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகள் அமைக்க முடியாது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இளகு இரும்பு ஆலைகளையும் இந்தப் பகுதிகளில் இனி அமைக்க முடியாது. செம்பு உருக்காலை, அலுமியம் உருக்காலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்புகள் பதப்படுத்துதல் ஆலைகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைக்க அனுமதியில்லை. தோல் பதனிடுதல், எண்ணெய், நிலக்கரி படுகை, மீத்தேன் ஆலைகளையும் இனி புதிதாக அமைக்க முடியாது.

ஷெல் எரிவாயு, ஹைட்ரோகார்பன் வாயுக்களின் ஆய்வுகள், விவசாயம் அல்லாத பணிகளுக்காக துளையிடுதல், பிரித்தெடுத்தலுக்கும் இனி அனுமதியில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலப்பகுதிகளில் கப்பல் உடைக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும் முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் விவசாயம் அல்லாத தொழில் சார்ந்த புதிய திட்டங்களுக்கு அனுமதி இனி அளிக்கப்படாது என்றாலும், ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள், திட்டங்கள் பாதிக்கப்படாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், இணைப்புச்சாலை, தொலைத்தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் போன்ற திட்டங்களையும் இந்தச் சட்டம் பாதிக்காது.