தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்ட மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழுவினரை விடுதலை செய்யக்கோரி 2ஆவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கதிராமங்கலத்தில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாயில் நேற்று முன் தினம் எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு 300க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மக்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 காவல்துறையினர் காயமடைந்தனர். தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. வன்முறைக்கு காரணம் எனக்கூறி மீத்தேன் எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதனால், கதிராமங்கலத்தில் அசாதாரண சூழல் தொடர்வதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.