புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சொத்துத் தகராறில் பெற்ற தந்தையின் உடலை 3 நாட்கள் அடக்கம் செய்யாமல் பிள்ளைகள் தகராறு செய்த சம்பவம் நடந்துள்ளது.
அறந்தாங்கியை அடுத்த மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன் கடந்த செவ்வாய்கிழமை காலமானார். வெள்ளையனின் சொத்துகளை மூத்தமகன் தன்பெயருக்கு மாற்றி வைத்துள்ளதாகவும், அதனை சரிசமமாக பிரித்து தரும் வரை உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கமுடியாது என்று மற்ற மகன்களும் பங்காளிகளும் தகராறு செய்தனர்.
இதனால் 3 நாட்களாக மூத்த மகன் விஸ்வநாதனின் வீட்டு வாசலிலேயே வெள்ளையனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. இதுபற்றி தகவல் அறிந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எட்டாம் நாள் சடங்குகள் முடிந்து சொத்துப் பிரச்னையை காவல்நிலையத்தில் வைத்து தீர்த்துக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டதையடுத்து பெரியவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சொத்துக்காக பெற்ற தந்தையை அடக்கம் செய்யாமல் 3 நாட்களாக இழுத்தடித்த மகன்களின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.