தமிழ்நாடு

சொத்துத் தகராறில் தந்தை அடித்துக் கொலை: தலைமறைவான மகனை தேடும் அரூர் போலீசார்

kaleelrahman

அரூர் அருகே சொத்துத் தகராறில் தந்தையை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மகன் தலைமறைவு. காவல் துறை உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தில் கோபால் (70), என்பவர் தனது விவசாய நிலத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ள நிலையில், தனக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை அனைவருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், கடைசி இரண்டு மகள்களும் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என தெரிவித்த நிலையில், மூத்த மகள் வாசுகி, தனக்கு சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டுள்ளார். இதை மகன் முருகேசனிடம் கோபால் தெரிவித்தபோது முருகேசன மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஆறு மாதமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று அரூர் காவல் நிலையத்தில் கோபால் புகார் கொடுத்துள்ளார். இதில் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், முருகேசன் இரும்பு ராடால் தந்தை கோபாலின் தலையில் அடித்துள்ளார்.

இதில், படுகாயமடைந்த கோபால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தந்தையை கொலை செய்த முருகேசன் தலைமறைவானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல் துறையினர், கோபால் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான முருகேசனை தேடிவருகின்றனர்.