அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரும் வரை மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உத்தங்குடி - கப்பலூர் இடையிலான சுற்றுச்சாலையில் 3 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் வண்டியூர், சிந்தாமணி, வளையங்குளம் ஆகிய இடங்களில் மேலும் 3 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் இந்தச் சுங்கச்சாவடிகள் நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி 27 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல மனுக்கள் தொடரப்பட்டன. அதில் சுங்கச்சாவடியை அமைக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. கடந்த வியாழக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, 4 வாரங்களில் சுங்கச்சாவடி பணிகள் நிறைவடையும் என்று சுங்கச்சாவடிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பையும் கேட்ட நீதிபதிகள், அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை, வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். இன்று காலை 9 மணி முதல் இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், வண்டியூர் சுங்கச்சாவடிக்கான கட்டணத்தை பிற சுங்கச்சாவடிகளில் வசூலிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.