திலகவதி ஐஏஎஸ்
திலகவதி ஐஏஎஸ் pt web
தமிழ்நாடு

ஐஐடி மாணவர் தற்கொலை; பேராசியர் பணியிடை நீக்கம்.. விசாரணைக்குழுவின் 700 பக்க அறிக்கை சொல்வதென்ன?

PT WEB

வெளியுலகிற்கு மறைக்கப்பட்ட வளாகமாகவே உள்ளது ஐஐடி... இதனை அங்கு நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் சென்னை ஐஐடி இயந்திரவியல் துறை மாணவர் சச்சின் ஜெயினின் தற்கொலை. படிப்பில் சிறந்து விளங்கிய அந்த மாணவரின் தற்கொலை சக மாணவர்களை மன வருத்தம் அடைய செய்தது. ஐஐடி நிர்வாக பேராசிரியர்கள் கொடுத்த மன அழுத்தம் காரணமாக தான் சச்சின் ஜெயின் உயிரிழந்ததாக சக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ. பி.எஸ். அதிகாரி திலகவதி தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை சென்னை ஐஐடி இயக்குநர் காமக்கோடி அமைத்தார். அக்குழு நடத்திய விசாரணையின் படி, சென்னை ஐஐடி இயக்குநர் காமக்கோடியிடம் 700 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்கள் என 120க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் ஆஷிஸ்குமார் கொடுத்த அழுத்தம் காரணமாகதான் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தியிருந்ததாக கூறுகிறார் சென்னை ஐஐடியின் முறைமன்ற நடுவர் திலகவதி.

மூடி முத்திரையிட்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் முழுமையான காரணம் குறித்து கூறமுடியாது என்றும் திலகவதி தெரிவித்துள்ளார். சச்சின் ஜெயின் தற்கொலை மட்டுமின்றி மேலும் இது போன்ற நிகழ்வுகள் சென்னை ஐஐடியில் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதனை சீர் செய்ய ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவகிறது என்றும் கூறிய திலகவதி, ஒவ்வொரு தற்கொலை குறித்து விசாரணை நடத்தும் காவல்துறை முழுமையான விசாரணை நடத்தாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

ஐஐடியில் மிகுந்த ஆசையுடன் சேர்ந்து ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வந்த சச்சின் ஜெயினுக்கு, பேராசிரியர் ஆஷிஸ்குமார் சென் மீது அதிக பற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன்படியே, அவரது ஆய்வுக் கூடத்தில் சச்சின் ஜெயின் உதவியாளராக செயல்பட்டு வந்துள்ளார். ஆனால், ஆய்வு மாணவியாக சேர்ந்த க்ஷித்தியா என்பவருடன் சச்சின் ஜெயின் பழகுவது பிடிக்காமல் பேராசிரியர் சச்சினை கண்டித்து வந்ததாகவும், தனிமைப்படுத்தி ஆய்வகத்திற்குள் நுழைய விடாமலும் மன உளைச்சலை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இது போன்ற மனஉளைச்சல் நாளடைவில் தற்கொலைக்கு தூண்டியுள்ளது. சென்னை ஐஐடியின் முறைமன்ற நடுவர் நடத்திய விசாரணையின் போது 20 மாணவர்கள் பேராசிரியர் ஆஷிஸ்குமார் சென் மீது குற்றச்சாட்டுகள் கூறியதாகவும், ஆஷிஸ்குமாருக்கு ஆதராவாக சிலபேராசிரியர்கள் கருத்துகளை முன்வைத்தாகவும் தெரிகிறது.

மேலும் சென்னை ஐஐடியில் புகார் பெட்டிகள் இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களுக்கு தடை விதிக்க வேண்டும், மனரீதியான பயிற்சிகள் மாணவர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்களுக்கும் தருவது அவசியம் என்றும் முறைமன்ற நடுவர் திலகவதி வலியுறுத்தியுள்ளார். இது போன்ற நிகழ்வுகள் தடுக்க பட வேண்டும் என்றும் முறைமன்ற நடுவர் குழு மாணவர்களின் நலனுக்காக செயல்படும் என்றும் புதிய தலைமுறை வாயிலாக திலகவதி தெரிவித்துள்ளார்.