தமிழ்நாடு

நிர்மலாதேவி விவகாரம் : அறிக்கையை தாக்கல் செய்தார் சந்தானம்

நிர்மலாதேவி விவகாரம் : அறிக்கையை தாக்கல் செய்தார் சந்தானம்

webteam

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதப் பிரிவு பேராசிரியராக பணி புரிந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ வெளியானது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, மாணவிகளை தவறாக வழிநடத்தியதாகக் கூறப்படும் பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிர்மலா தேவி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.கைதான நிர்மலா தேவி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்தவழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விருதுநகர் சிபிசிஐடி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். 

இதையடுத்து, சந்தானம் குழுவினர் பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆளுநர் அமைத்த விசாரணை குழு அதிகரியான ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் விசாரணையை முடித்துள்ள நிலையில், கடந்த 10ஆம் தேதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சந்தானம் தாக்கல் செய்யும் அறிக்கையை வெளியிடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவினர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணையை முடிந்து நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் .