மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்குத் தூண்டிய பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. அவர் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மாணவிகளிடம் பேராசிரியை பேசிய செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து, தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகாரளித்தது. அதன் அடிப்படையில் நிர்மலா தேவி நேற்று இரவு அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தருவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் நிர்மலா மீதான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் டிஜிபி ராஜேந்திரன் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதுவரை அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், மேல்விசாரணைக்காக தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த பல்கலைக்கழகம் அமைத்த குழு வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்மலா தேவியை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தானத்தை ஆளுநர் நியமித்துள்ளதால், தங்கள் விசாரணைக்குழுவை வாபஸ் பெற்றுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.