காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உரிய சான்று பெறாமல் 400க்கும் மேற்பட்ட எம் சாண்ட் நிறுவனங்கள் இயங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் சிலர் எம்-சாண்ட் தயாரிக்கும் போது உருவாகும் கழிவுகளை வீடு கட்ட பயன்படுத்தலாம் என்று மக்களை ஏமாற்றி விற்பனை செய்வதும் புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கட்டுமானத்திற்கு எம்-சாண்ட் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பாறைகளை உடைத்து, சலித்து மணல் பதத்திற்கு ஏற்ப 'எம்.சாண்ட்' தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 456 எம்.சாண்ட் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் என்னவென்றால் அவற்றில் 50 ஆலைகள் மட்டுமே பொதுப்பணித்துறை மூலம் தர நிர்ணய சான்று பெற்றவை. மற்ற ஆலைகள் பொதுப்பணித்துறை சான்று பெறாமல், தரமில்லாத எம்.சாண்ட் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தர நிர்ணய சான்று பெறாமல் இயங்கி வரும் ஆலைகளில் எம்-சாண்ட் மணலில் கிரஷ்ஷர் டஸ்ட் அதிக அளவு கலந்திருப்பதாக கூறப்படுகிறது. கிரஷ்ஷர் டஸ்ட் என்பது ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவு. அவற்றை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால், கிரஷர் டஸ்ட்டை மிகக் குறைந்த விலைக்கு டன் கணக்கில் வாங்கிச் சென்று அதை தண்ணீரில் நனைத்து, எம்-சாண்ட் என்று ஏமாற்றி சிலர் விற்பனை செய்வது புதிய தலைமுறையின் கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
தர நிர்ணய சான்று பெறாமல் செயல்பட்டு வரும் ஆலை ஒன்றில் கள ஆய்வு மேற்கொண்ட போது, தங்கள் வாகனத்தில் எம்-சாண்ட் ஏற்றிச் சென்றால் அனுமதி சீட்டுடன் ரசீது கொடுத்து விடுவோம் என்கிறார் நிர்வாகி ஒருவர்.
காஞ்சிபுரம் மாவட்டங்களில் உத்திரமேரூர், திரிசூலம் பகுதிகளில் இருந்த பல மலைகளை தற்போது காணவில்லை. 500 அடி உயரம் கொண்ட மலை முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டு ஆயிரத்து ஐநூறு அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி கனிம வளங்களை எடுக்கிறார்கள். இதனால் பேரிடர் காலங்களில் பெரும் விபத்து ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, பொதுப்பணித் துறையினரால் வழங்கப்படும் தரநிர்ணய சான்று பெற்றிருந்தால் மட்டுமே நிறுவனங்கள் இயங்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் இன்னும் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவித்தனர். மேலும், பல்வேறு எம்-சாண்ட் நிறுவனங்கள் பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவை அனுமதி பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.