தமிழ்நாடு

சென்னை: வேலு நாச்சியார், வ.உ.சி முகமூடியுடன் மாணவ- மாணவிகளின் ஊர்வலம்

Veeramani

வேலு நாச்சியார், வ.உ.சி. உள்பட சுதந்திர போராட்ட தலைவர்களின் முகமூடி அணிந்து நடைபெற்ற மாணவ- மாணவிகளின் ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது.

குடியரசு தினத்தில் விடுதலை போராட்ட தலைவர்களின் முகமூடி அணிந்து சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி டி.கே.ரங்கராஜன் பங்கேற்றார்.

இந்த ஊர்வலத்தில் சுதந்திர போராட்ட தலைவர்களான பாரதியார், வ.உ.சி., வேலு நாச்சியார் உள்பட பல தலைவர்களின் முகமூடி அணிந்தும், அவர்களைப்போல உடை அணிந்தும் சென்றது அனைவரையும் கவர்ந்தது.

மத்திய அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் பாரதியார், வஉசி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோர் உருவ படங்கள் இடம் பெறாததை கண்டித்தும் ஊர்வலம் நடந்தது.

இது குறித்து பேசிய முன்னாள் எம்.பி டி.கே.ரங்கராஜன், "குடியரசு என்பது பொது மக்களுக்கான அரசு, ஆனால் அது தற்போது மன்னர் ஆட்சி போன்று நடைபெற்று வருகிறது. மத்தியில் இருக்கும் அரசாங்கம் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வேலு நாச்சியாரை அனுமதிக்கவில்லை. அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இந்த நாட்டை மத்தியில் இருக்கும் பாஜக விரும்பவில்லை, பிரிக்க நினைக்கிறது. இதை எதிர்த்து போராட வேண்டும்"என்றார். ஊர்வலத்தின் இறுதியில் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.