தமிழ்நாடு

"தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் !

"தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம்" - சென்னை உயர்நீதிமன்றம் !

jagadeesh

2020 - 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அரசு உதவிப் பெறாத கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பித்தார். அதில் "கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா தொடர்கிறது. இதன் தாக்கம் எப்போது குறையும் தெரியாத நிலையில் உள்ளது. அரசு உதவிப்பெறாத கல்வி நிறுவனங்கள் இந்த வழக்குகளை தொடர்ந்துள்ளது" என்றார்.

மேலும் " எனவே அரசு அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து உரிய முடிவை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கினால்தான், உதவிப் பெறாதவை செயல்பட முடியும் என கல்வி நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்படுகிறது. அதே நேரத்தில் கட்டணம் செலுத்தக்கூடிய நிலைமையில் இல்லை என்ற பெற்றோர் தரப்பில் சொல்லப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75% கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது" என்றார்.

தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் " மேலும் இரண்டாம் தவணையான 25% பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் என அரசு சொல்லியுள்ள நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கும் என தெரியாத நிலை இருக்கிறது. அதனால் 2020-21 முதல் தவணை 40 % ஆகஸ்ட் 31க்குள் பள்ளிகள் வசூலிக்கலாம். இந்த உத்தரவு அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்" என்றார்.

இறுதியாக "இந்த உத்தரவு மறு உத்தரவு வரும் வரை பொருந்தும். மேலும் பாடப் புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு அக்டோபர் 5 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டார் ஆனந்த் வெங்கடேஷ்.