திருப்பூரில் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலையும் மீறி பணம் வசூலிக்க சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24-ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலானது. இந்நிலையில் இந்த ஊரடங்கானது ஜீலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் காலக்கட்டங்களில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகையை கேட்டு வலியுறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர், மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் தவணைத் தொகையைக் கேட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து அப்பகுதி பெண்கள் ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமரசம் பேசி ஊழியரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.