தமிழ்நாடு

தனியார் பால் நிறுவனங்கள் பயன்படுத்தும் ரசாயனம் என்ன?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

webteam

பால் அதிக நாட்கள் கெடாமல் இருக்க தனியார் பால் நிறுவனங்கள் எந்தவிதமான ரசாயனத்தைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தனியார் பால் நிறுவனங்களின் பாலைப் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்த தனியார் பால் நிறுவனங்கள், அமைச்சரின் குற்றச்சாட்டு தவறான தகவல் என்று தெரிவித்திருந்தன. இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 5 மாதங்களாக ஆய்வு செய்த பின்னரே இந்த குற்றச்சாட்டை முன்வைப்பதாகக் கூறினார். கறந்த பாலானாது 5 மணி நேரத்தில் கெட்டுவிடும். அவ்வாறு கெட்டுவிடாமல் இருக்கும் பாலானது உடல் நலத்துக்கு தீங்கானது. பாலானது அதிகநேரம் கெட்டுப்போகாமல் இருக்க வெட்டுக் காயத்தைக் குணப்படுத்தப் பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடு எனும் ரசாயனத்தை தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலக்கின்றன. திரவ வடிவிலான இந்த ரசாயனத்தை பாலில் ஒரு சில சொட்டுக்கள் கலந்தால் போதும். அந்த பால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். இந்த முறைகேட்டில் யாருக்கு தொடர்பிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் தமிழகத்துக்கு தேவையான பால் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியுமா என்ற கேள்வியை சிலர் முன்வைக்கின்றனர். ஆவின் நிறுவனம் தேவைக்கு அதிகமாகவே பாலை கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள பாலினை பால் பவுடராக மாற்றி வெளிமாநிலங்களுக்கு அனுப்புகிறோம். தேவை ஏற்படின் அந்த முறை நிறுத்தப்பட்டு பாலாகவே மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.