கோவை மத்திய சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் போனில் பேசுவதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தற்போது 938 தண்டணை கைதிகளும், 800 விசாரணை கைதிகளும், 54 குண்டாஸ் பிரிவு கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேச 8 டெலிபோன் பூத் உள்ளன. சிறையிலுள்ள டெலிபோன் மூலம் குடும்பத்தினர், உறவினர்களுடன் பேச விரும்பும் கைதிகள், பேச விரும்பும் நபர்களின் பெயர், அவர்களது தொலைபேசி எண் ஆகியவற்றை சிறைத்துறை அதிகாரிகளிடம் அளிப்பர்.
சிறைத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் அந்த எண்ணை சரிபார்த்த பிறகு கைதிகள் பேச அனுமதி வழங்கப்படும். ஒரு கைதி மாதத்தில் ஐந்து முறை இதுபோன்று தொலைபேசி மூலம் பேசலாம். ஒவ்வொரு மாதமும் 30 நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர். ஆனால் தற்போது கைதிகள் தங்களது உறவினர்களிடம் ஒவ்வொரு மாதமும் 45 நிமிடம் வரை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு ஏற்ப கோவை மத்திய சிறையிலுள்ள டெலிபோன்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.