தமிழ்நாடு

போதைப் பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட விசாரணைக் கைதி தற்கொலை - நடந்தது என்ன?

webteam

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு துறை செயல்பட்டு வருகிறது. ரகசிய தகவலின் அடிப்படையில போதைப் பொருள் கட்டுப்பாடு துறை அதிகாரிகள், தெலங்கானா மாநிலம் ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி ராயப்பா அந்தோணி ராஜ் என்பவர், மெத்தபேட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட 50 கிலோ போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து தெலங்கானா பகுதிக்கு விரைந்து சென்று, மத்தியப் போதை கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து வந்து சென்னை மண்டலத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். விசாரணையின் போது யாரும் எதிர்பாராத வகையில், மூன்றாவது மாடியில் இருந்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த குற்றவாளி ராயப்பா அந்தோணி ராஜ் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்ப இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் விஜயராகவன் உள்ளிட்ட காவலர்கள் தடவியல் நிபுணர்கள் அழைத்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூராய்வுகாக ராயப்பா அந்தோணி ராஜ் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றவாளி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.