தமிழ்நாடு

டீ கேட்ட கைதி... பரிதாபப்பட்ட காவலர் ஏமாந்த பரிதாபம் !

டீ கேட்ட கைதி... பரிதாபப்பட்ட காவலர் ஏமாந்த பரிதாபம் !

webteam

திரைப்பட நகைச்சுவை காட்சியைப் போன்று கைதியை தப்பவிட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற பல்சர் பாபு மீது 10க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளன. பல்சர் பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறி செய்வது இவரது ஸ்டைல். அதனால் பாபு என்ற பெயருக்குக் முன் பல்சர் அடைமொழியாய் ஒட்டிக் கொண்டது. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

சிகிச்சைக்காக ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பல்சர் பாபு. கஜேந்திரன், சுந்தர் என்ற 2 ஆயுதப்படை காவலர்கள் அவரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கஜேந்திரன் கண்காணிப்பு பணியில் இருந்தபோது, தனக்கு தலை வலிப்பதாக கூறிய பல்சர்பாபு, ஒரு டீ வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். கைதியின் மீது பரிதாபப்பட்ட காவலர் கஜேந்திரன், மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று அன்போடு டீயும், பிஸ்கட்டுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது, கஜேந்திரனிடம் பணியை மாற்றிக் கொள்வதற்காக சுந்தர் என்ற காவலர் பல்சர் வாகனத்தில் டீக்கடைக்கு வந்துள்ளார். கஜேந்திரனுடன் பேசியபடி, வண்டியில் இருந்து இறங்கிய சுந்தர், தனது துப்பாக்கியையும், சாவியையும் வண்டியிலேயே மறந்து வைத்துவிட்டு டீக்கடைக்குச் சென்றுள்ளார். பேசும் ஆர்வத்தில் பாபுவை கண்காணிக்க காவலர்கள் மறந்துள்ளனர். அதனால், சாவியோடு நிற்கும் பல்சர் வண்டியைக் கண்ட பாபு, துப்பாக்கியை எடுத்து அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு, அவருக்கு மிகவும் பிடித்த பல்சர் வண்டியிலேயே தப்பிச் சென்றுள்ளார்.

பல்சர் பாபு தப்பிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்த காவலர்கள், அப்பகுதி முழுவதும் தேடியலைந்துள்ளனர். அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுள்ள கைதியை, மருத்துவமனை வளாகத்தை இருந்து வெளியே அழைத்துச் சென்றது ஏன், கவனக்குறைவாக இருந்தது யார் என, காவலர்கள் கஜேந்திரன், சுந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.