மதுரையில் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது தப்பிச்சென்ற முருகன் என்ற கைதியை போலீஸார் 3 நாட்களாக தேடி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் பெருங்குடி சென்றார். அவரிடம் மூன்று வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1500-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிப்பறி செய்த முருகன் (எ) தவளை முருகன், செல்வக்குமார், பாலமுருகன் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் மதுரை மத்தியச் சிறையில் அடைப்பதற்கு முன்பு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைதி முருகன் தப்பியோடினார். முருகன் தப்பி ஓடுவதைக் கண்ட போலீசாரால் அவரைத் துரத்திப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மற்ற இருவரையும் அங்கிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக திருமங்கலம் டிஎஸ்பி அருண், பெருங்குடி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அத்துடன் தப்பியோடிய முருகனை விரைந்து கைது செய்யவும் உத்தரவிட்டார். போலீசார் முருகனை தேடி வந்தனர். ஆனால் 3 நாட்களாகியும் இதுவரை முருகனை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.