தமிழ்நாடு

சகோதர... சகோதரிகளே! தமிழில் மோடி உரை

webteam

தமிழக அரசு விழாவில் அன்பு மிக்க சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்தத் தினமான இன்று தொடங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.அதன்படி இவ்விழாவில் பங்கேற்பதற்கான பிரதமர் மோடி சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள ஐ.என்.எஸ். விமானப்படைத்தளத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கலைவாணர் அரங்கம் வந்தவர் அங்கு மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

பின்னர் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இவ்விழாவில் பேசிய பிரதமர் மோடி, “அன்பு மிக்க சகோதர சகோதரிகளே வணக்கம், தமிழ் மொழிக்கும், பாரம்பரியத்திற்கும், உங்களுக்கும் தலைவணங்குகிறேன். பாரதி பிறந்த மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன்.ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. பெண்களின் கல்விக்கு உதவி செய்யும்போது அந்தக் குடும்பமே பயன்பெறுகிறது.பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மாநில அரசோடு இணைந்து நிறைவேற்றுகிறோம். பல்வேறு திட்டங்கள் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியைவிட கூடுதலாக மத்திய அரசு வழங்கியுள்ளது” எனக் கூறினார்.