தமிழ்நாடு

பிரதமர் நாளை தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

webteam

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை அடிக்கல் நட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி 11.15 மணிக்கு மதுரை விமானநிலையம் வந்தடைகிறார். ‌இதையடுத்து சுற்றுவட்டச்சாலை வழியாக வரும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் மதுரை, நெல்லை மற்றும் தஞ்சையில் 450 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையினையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழாவில் ஆளுநர் பன்ரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.இராத கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளவுந்தராஜன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்துக் கொள்ள உள்ளனர். இந்நிலையில் விழா நடைபெற உள்ள இடத்தில் காவல்த்துறையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், நுண்ணரிவு பிரிவினர் என பல்வேறு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பிரதமர் பங்கேற்கும் விழாவிற்க்கான ஏற்பாடுகள், பாதுகாப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பரை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள விழாவில் கலந்துக் கொள்பவர்களை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க உள்ளனர். இதனைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதையடுத்து சாலை மார்க்கமாக மதியம் 1.05 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கொச்சிக்குப் புறப்படுகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக தோப்பூருக்கு பதில் மண்டோலா நகர் திடலில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.