பாதுகாப்பு வளையத்தில் கங்கைகொண்ட சோழபுரம் pt
தமிழ்நாடு

பாதுகாப்பு வளையத்தில் கங்கைகொண்ட சோழபுரம்... தொடங்கியது ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தொடங்கியது ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா!

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. கங்கைகொண்ட சோழபுர விழா மேடையில், பிரதமர் மோடியுடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.பி, திருமாவளவன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் பங்கேற்பு. தொடர்ந்து, மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் ஓதுவார்கள் திருமுறை ஓதினர். இதனைத்தொடர்ந்து இளையராஜா தலைமையில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.

கங்கை கொண்ட சோழீஸ்வரருக்கு தீபாரதனை காட்டி திருவாசகம் பாட,சோழீஸ்வரை வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி.

கங்கைகொண்ட சோழபுரத்தில் மோடி சாலைவலம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்தார். வழிகளில் பாஜக, அதிமுக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அழித்தனர்.

சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8 கி.மீ. தூரத்துக்கு பிரதமரின் சாலைப்பேரணி நடைபெறுகிறது. திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள பொன்னேரியில் பிரதமர் மோடி வந்திறங்கினார். இதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக கங்கைகொண்ட சோழபுரத்திற்குப் புறப்பட்டார்.

கங்கைகொண்டசோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

ஹெலிகாப்டரில் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஒருபுறம் அதிமுக- மறுபுறம் பாஜக கொடிகளுடன் பிரதமரை வரவேற்க திரண்டுள்ள தொண்டர்கள்

மோடியை சந்திக்கிறாரா OPS?

தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடியை பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே மோடியை சந்திக்க நேரம் கேட்ட நிலையில், பழனிசாமியுடனான சந்திப்பை உறுதிசெய்திருந்தார் பிரதமரின் செயலர். திருச்சிக்கு வந்து பிரதமரை சந்திக்கும்படி பழனிசாமி தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், நேற்று இரவு 10 மணிக்கு மேல் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திலேயே வந்து சந்தித்தார். மேலும், பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோரும் பிரதமரை வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் ஈபிஎஸ் உடன் பிரதமரை சந்திக்க வருகை தந்தனர். ஆனால், பன்னீர்செல்வத்துடனான சந்திப்பை பிரதமர் மோடி தற்போதுவரை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வருகை.. போராட்டம்.. திருச்சியில் பரபரப்பு!

பிரதமரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் காங்கிரஸ் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தினை மேற்கொள்கின்றனர்.

சாலைவலம் செல்லும் மோடி.. தற்போதைய நிலை என்ன?

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சிபுரிந்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் கங்கை கொண்ட சோழபுரத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையொட்டி தமிழகம் வருகை தந்திருக்கும் பிரதமர் மோடி , கோயிலில் தரிசனம் செய்து, ராஜேந்திர சோழனின் நாணயத்தையும் வெளியிடுகிறார். இந்நிலையில், சோழகங்கம் ஏரியிலிருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை சாலைவலம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி. இதற்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடிக்கு முதல்வர்  ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்றும், மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், கோவை , மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் முதல்வர் வலியுறுத்தி பிரதமர் மோடியில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களை விரைவாக செயல்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முன்னதாக தமிழகம் வரும் பிரதமரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதேபோல அமைச்சரும் வழங்கியுள்ளார்.

கண்காட்சியை பார்வையிடவுள்ள பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

பாதுகாப்பு வளையத்தில் கங்கைகொண்ட சோழபுரம்.. பிரதமர் எத்தனை மணிக்கு வருகிறார்?

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடும் பிரம்மாண்ட நிகழ்ச்சி இன்று (ஜூலை 27) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மோடி திருச்சி சென்றுள்ளார்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி நண்பகல் 12 மணியளவில் வருகை தர இருக்கிறார். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்தில் கங்கைகொண்ட சோழபுரம் தற்போது இருக்கிறது. சோழகங்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் - உச்சகட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தரிசனம் செய்யவுள்ள பிரதமர், ராஜேந்திர சோழனின் நாணயத்தையும் வெளியிடுகிறார்.

முன்னதாக, மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார். தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்து வந்திறங்கிய அவர், விமான நிலையத்தில் 452 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு - சோழபுரம் நான்கு வழிச்சாலை, தூத்துக்குடி துறைமுக சாலையின் ஆறு வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கூடவே, மதுரை - போடிநாயக்கனுார் ரயில் பாதை மின்மயமாக்கல் பணி; கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி இடையே நிறைவடைந்த ரயில்வே இரட்டைப் பாதை ஆகியவற்றையும் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என். ரவி, எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமருக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.