மோடி
மோடி ட்விட்டர்
தமிழ்நாடு

’நான் 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது இதற்குத்தான்..’ - சென்னை கூட்டத்தில் மோடி பேச்சு!

Prakash J

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. இதையடுத்து பிரதமர் மோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், பாஜக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 4) சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, “எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. நீங்கள் என்மீது வைத்திருக்கக்கூடிய அன்பும் பழமையானது. சில ஆண்டுகளாக நான் தமிழகத்திற்கு வரும்போது சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. சிலரின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. காரணம் என்னவென்றால் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கிறது என்பதால்தான்.

சென்னையில் நெடுந்தூரம் மக்கள் வெள்ளம்கூடி உள்ளது. சென்னை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக அரசு மத்திய அரசு செய்துவரும் நலத்திட்டங்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது மக்களுக்கு நேரடியாக உதவுவதற்குப் பதிலாக விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள். நீங்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசு உங்கள் வேதனையைப் புரிந்துகொள்கிறது. உங்களுக்காக பணியாற்றுகிறது.

திமுக அரசின் மனக்குறை என்னவென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாகச் செல்கிறது என்பதுதான். லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என வருந்துகிறது திமுக அரசு. குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன.

உங்களுக்கு திமுகவையும் தெரியும், காங்கிரஸ் கட்சியையும் தெரியும். இவர்களைப்போல் பலர் உள்ளனர். குடும்பம் முதலில். ஆனால் எனக்கு இந்த நாடு முதலில்... பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை எனச் சொல்கிறார்கள். அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டுச் சொத்தை திருடுவதா? இந்த நாடுதான் எனது குடும்பம்; நாட்டு மக்கள்தான். எனக்கு 16 வயது ஆனபிறகு வீட்டைவிட்டு வெளியேறினேன். எதற்காக வெளியேறினேன் என தெரியுமா? இந்த தேசத்துக்காகத்தான் வெளியேறினேன். நீங்கள்தான் எனது குடும்பம். இந்த இந்தியாவைச்சேர்ந்த அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள். இளைஞர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்க கடுமையாக உழைத்து வருகிறேன்” எனப் பேசினார்.

முன்னதாக, நேற்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ’பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு இந்தக் கூட்டத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.