பிரதமர் மோடி
பிரதமர் மோடி பிரதமர் மோடி
தமிழ்நாடு

தமிழகம் வரும் பிரதமர் மோடி.. வழிநெடுக பேனர்கள்; போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்னை

Madhalai Aron

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். தனி விமானம் மூலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை சென்னை வரும் பிரதமர், விமான நிலைய வி.ஐ.பி அறையில் சிறிது நேரம் ஒய்வெடுக்க இருக்கிறார். அதற்குப் பின் அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மாலை 6 மணியளவில் நேரு விளையாட்டு அரங்கம் செல்கிறார்.

பிரதமரின் வருகைக்காக சென்னையில் மட்டும் 22 ஆயிரம் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி என்சிசி மாணவர்களின் உதவியும் பாதுகாப்பு பணிக்காக கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களின் அணிவகுப்பில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. இந்த 5 அடுக்குகளில் NLG என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர், மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார், உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் ஆகியோர் உள்ளனர்.

அனைவரின் பாதுகாப்புடன், நேரு உள்விளையாட்டு அரங்கம் விழாவுக்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு மேல் வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்க வழி நெடுக பேனர்கள், விளக்குகள் என வண்ணமயமான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. தமிழக பாஜக சார்பிலும் பலத்த வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தவிர அரங்கத்துக்குள் யாரும் தற்போதைக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.

மாலை தான் பிரதமர் வருகின்றார் என்றபோதிலும், அதற்கு முன்னதாகவே போக்குவரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பிரதமர் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், சாலை வெறிச்சோடி காணப்படுகின்றது இன்று மட்டுமன்றி, நாளையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக பின்பற்றப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.