அரிசி
அரிசி pt web
தமிழ்நாடு

ஏற்றுமதிக்கு தடை விதித்தும் தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசியின் விலை

Angeshwar G

அரிசி விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருச்சியில் 26 கிலோ கொண்ட அரிசி சிப்பத்தின் விலை 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஆந்திரா பொன்னி கடந்த ஆகஸ்டில் ஆயிரத்து 250 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்பாது ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கர்நாடகா பொன்னி ஆயிரத்து 200 இல் இருந்து ஆயிரத்து 400 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையான பொன்னி பச்சை தற்போது ஆயிரத்து 500க்கு விற்பனையாகிறது. தஞ்சாவூர் பகுதியில் அரிசி கிலோ ஒன்றுக்கு 4 ரூபாய் வரையும் மூட்டை ஒன்றுக்கு 100 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். நெல் விளைச்சல் குறைந்துள்ளதும் கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதும் விலையேற்றத்திற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரிசி விலை ஏற்றத்தின் காரணமாக அதை சிப்பங்களாக வாங்குவதை குறைத்துக்கொண்டு கிலோ கணக்கில் வாங்குவதாக கூறுகின்றனர் நடுத்தர வர்க்க மக்கள். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவின்மையே நெல் விளைச்சல் குறைய காரணமாக அரிசி விலை உயர வழிவகுத்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அப்படி இருந்தும் அதன் விலையேற்றம் தொடர்வதால் அரசுத்தரப்பில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.