தமிழ்நாடு

விலைவாசி உயர்வை கண்டித்து 5-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - பிரேமலதா விஜயகாந்த்

kaleelrahman

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற ஐந்தாம் தேதி தேமுதிக சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.

மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறித்த கேள்விக்கு, இந்தியாவில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்துள்ளது. இதனால்தான் வருகிற 5ஆம் தேதி மத்திய, மாநில அரசை கண்டித்து தேமுதிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தேர்தல் முடிவுக்குப் பிறகு தேமுதிக கட்டமைப்பு குறித்த கேள்விக்கு, தேமுதிக கட்டமைப்பு என்றும் வலிமை மிக்கதுதான். அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். வெற்றியை கண்டு ஆணவம்படுவதோ தோல்வியை கண்டு துவண்டு போவதோ தேமுதிக-விற்கு கிடையாது எனக் கூறினார்.

விஜயகாந்த்-ஸ்டாலின் நட்புறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் மீது விஜயகாந்திற்கு என்றைக்குமே நட்புறவு இருக்கும் என்றார். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடருமா என்று கேட்டதற்கு, முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் ஆலோசனை கூட்டம் கூட்டி தலைமை அறிவிக்கும் எனக் கூறினார்.