தமிழ்நாடு

‘8% வரியை ரத்து செய்யுங்கள்’ - புதிய அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை

kaleelrahman

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள திமுக அரசு திரையரங்கு உரிமையாளர்களின் நலனை காக்கும் வகையில் 8 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பூரில் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது... புதிதாக பொறுப்பேற்க உள்ள திமுக அரசுக்கு, வாழ்த்துகளை தெரிவித்தார். கருணாநிதி ஆட்சி காலத்தின் போது திரை கலைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்திருப்பதாகவும் அந்த வழியில் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் திரைக் கலைஞர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு திட்டங்களை செய்வார் என நம்புகிறோம்.

விரைவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உட்பட திரை கலைஞர்கள் இணைந்து பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும், கொரோனா காலகட்டத்தில் மிகவும் நலிவடைந்த திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திரையரங்குகள் இயங்காத, ஊரடங்கு காலத்திற்கான சொத்துவரி, தொழில்வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்படும் 8 சதவீத உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும். அதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும் என கோரிக்கை வைத்தார். புதிதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் இருப்பதாலும் விநியோகஸ்தர் என்பதாலும் எங்களின் கஷ்டம் அவருக்கு தெரியும் என்பதால் அவர் மூலமாகவும் எங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.