மருந்து சீட்டு
மருந்து சீட்டு முகநூல்
தமிழ்நாடு

புரியாமல் எழுதக்கூடாது! இனி மருந்து சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில்தான் எழுதணும் - அதிரடி உத்தரவு

PT WEB

செய்தியாளர் : பால வெற்றிவேல்

இனி மருந்து சீட்டு எழுதும்போது அட்டையில் மக்களுக்கு தெளிவாக புரியும் வகையில் கேப்பிட்டல் (capital) எழுத்தை பயன்படுத்தி மருந்து குறித்தான விவரங்களை மருத்துவர்கள் எழுத வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மருந்துகள் எழுவது தொடர்பாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ”இனி  நோயாளிகளுக்கு வழங்கும் மருந்து சீட்டுகளில்  மருத்துவர்கள் மருந்துகளின் பெயர்களை CAPITAL எழுத்துகளில் மட்டுமே எழுத வேண்டும்.” என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் நோக்கம், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளில் உள்ள எழுத்துக்களை எளிதில் புரிந்து கொள்ள உதவுவதாகும். சமீபத்திய ஆய்வுகளின்படி, மருத்துவர்களின் கையெழுத்து பெரும்பாலும் படிக்க முடியாததாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், நோயாளிகள் தவறான மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் அபாயம் ஏற்படுகிறது. CAPITAL எழுத்துக்களில் எழுதுவது எளிதில் படிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால், இந்த உத்தரவு நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, இனி நோயாளிகள் புரிந்து கொள்ளும்படி, மருந்து பரிந்துரை சீட்டுகளில் மருந்துகளின் பெயர்கள் மற்றும் டோஸ்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஆங்கில கேப்பிட்டல் எழுத்துகளில் மட்டுமே எழுத வேண்டும்.

இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மேலும் இதில் மருந்துகளின் பெயர்கள் மற்றும் டோஸ் பற்றிய தெளிவான வழிமுறைகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.