தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்: பரப்புரையை தொடங்கிவிட்டேன் - அமைச்சர் உதயநிதி

webteam

கரூரில் மக்களவைத் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறேன். திமுகவினர் தேர்தலுக்கு தயாராகுங்கள் என் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கரூர் மாவட்டத்தில் 1,270 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசினார். அப்போது...

இதுவரை 20,000 மூத்த முன்னோடிகளுக்கு 20 கோடி ரூபாய் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 1,270 திமுக மூத்த முன்னோடிகளுக்கு ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது. கட்சி வேலை என்று எடுத்துக் கொண்டால் அது ஒரு மாவட்டத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி.

சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு வெற்றியை திமுகவிற்கு பெற்றுக் கொடுத்தாரோ அதேபோல் கோவை மாவட்டத்திலும் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்தவர் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை கரூர் மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதோ இப்போதே 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை கரூரில் தொடங்குகிறேன். இதுதான் மக்களவைத் தேர்தலுக்கான முதல் பொதுக்கூட்டம். திமுகவினர் அனைவரும் மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுவோம் என சூளுரைப்போம்.

உள்ளாட்சித் தேர்தலின் போதும் என்னுடைய முதல் தேர்தல் பரப்புயை கரூர் மாவட்டத்தில் தான் தொடங்கினேன். நான் மட்டுமல்ல திமுக தலைவர் கருணாநிதி தனது முதல் தேர்தலில் சந்தித்ததும் கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் தான் அதன்பிறகு 13 முறை எம்எல்ஏ-வாகவும் ஐந்து முறை முதல்வராகவும் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என பேசினார்.