தமிழ்நாடு இதுவரை கண்டிராத, அனுபவித்திராத கூட்டணி ஆட்சி முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த். அதிகாரம் ஒரே இடத்தில் திரள்வதை தடுக்க வேண்டும் என்பதே கூட்டணி ஆட்சிக்கான எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட தேமுதிக, இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து, விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் களம் கண்டது. விருதுநகரில் போட்டியிட்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், வெற்றியை ருசிக்கும் வாய்ப்பை, வெறும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தார். பின்னர், அதிமுக உறுதியளித்தது போல, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தரவில்லை என வெகுண்டெழுந்து, கூட்டணியில் இருந்து விலகினார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அதே நேரத்தில், திமுக அரசின் மீது எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் விமர்சனங்களை, ஆமோதித்து வருகிறார். மேலும், பாஜகவுடனான நல்லுறவை, விஜயகாந்த் காலத்தில் இருந்தே, இன்னும் பேணி வருகிறார். ஆகஸ்ட் 30ஆம் தேதி மூப்பனார் நினைவிடத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளரான தனது தம்பி சுதீஷை அனுப்பி வைத்து நட்பு பாராட்டினார் பிரேமலதா. அதே வேளையில், கடந்த ஜூன் மாதம் மதுரையில் பொதுக் குழுக் கூட்டம் நடத்திய திமுக, விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கும் நன்றி கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.
முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு சென்று திரும்பியபோது, வீட்டுக்கே நேரில் சென்று நலம் விசாரித்தார். இப்படியாக, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சம தொலைவில் இருக்கிறது தேமுதிக. இந்த சூழலில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக எல்லா கட்சிகளுடனும் நட்பாக இருப்பதாகவும், கூட்டணிக்கான அழைப்பை இதுவரை யாரும் விடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். கூட்டணி குறித்த தேமுதிகவின் முடிவை, ஜனவரி 9இல் கடலூர் மாநாட்டில் அறிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி குறித்து மதிப்பீடு செய்த பிரேமலதா, முதல்வர் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்று சான்றளித்துள்ளார். ஆனால், முதல்வரைப் போல, அமைச்சர்கள் நடந்து கொள்வதாக தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார். அதிமுக பற்றி பேசுகையில், எடப்பாடி பழனிசாமி திறமையாளர் என்றாலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பு இன்றி இருப்பதாக மதிப்பீட்டை முன்வைத்துள்ளார். தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய், ஒரு திரை நட்சத்திரம் என்பதால், அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே கூட்டம் கூடுவதாக கூறுகிறார் பிரேமலதா விஜயகாந்த். அரசியல் என்பது சினிமா போல எளிதல்ல என்பதை விஜய் நினைவில் கொள்ளவேண்டும் என்றும் அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
அதே நேரத்தில், தவெக தலைவர் விஜய் முன்வைத்த, கூட்டணி ஆட்சி என்ற அம்சத்தை வரவேற்றுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணி ஆட்சி என்பதை தமிழ்நாடு இதுவரை பார்க்கவில்லை, இதுவரை அனுபவிக்கவில்லை என்றாலும், இதனால், அதிகாரம் ஒரே இடத்தில் குவிவது தடுக்கப்பட்டு, மக்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்க முடியும் எனவும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.