பிரேமலதா விஜயகாந்த் x
தமிழ்நாடு

”தனியாக தேர்தலைச் சந்திக்க மாட்டோம்” - பிரேமலதா விஜயகாந்த் உறுதி

’’தேமுதிக தனித்து நின்று தேர்தலைச் சந்திக்காது, நிச்சயமாக கூட்டணி அமைக்கும்’’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PT WEB

சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஓரளவுக்கு கூட்டணியை உறுதி செய்துவிட்டன. நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்துவிட்டது. ஆனால், தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கூறியும் எந்தக் கட்சிகளும் இன்னும் கூட்டணிக்கு வரவில்லை.

தேமுதிக மாநாடு

இந்தச் சூழலில்தான், கடந்த ஜனவரி மாதமே நடந்த மாநில மாநாட்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்பதை தெரிவிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்த நிலையில், மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. தொடர்ந்து, மாநாடு முடிந்து 20 நாட்களை கடந்தும் இன்னும் எந்தக் கூட்டணியில் இடம்பெறப் போகிறோம் என அறிவிக்காமலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில், திமுக, அதிமுக என இருகட்சிகளிடமும் தேமுதிக கூட்டணி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், தவெகவுடன் கூட்டணி வைக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த்

அப்போது, தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்திக்காது; நிச்சயமாக கூட்டணி அமைக்கும் எனவும், தமிழ்நாட்டில் மூன்றாவது அணி பற்றி இப்போது சொல்ல முடியாது. கூட்டணிப் பேச்சுவார்த்தை கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து பேசித்தான் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் நிச்சயமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.