மீட்கப்பட்ட பெண் pt web
தமிழ்நாடு

4 வருட காத்திருப்புக்கு பின் குழந்தைப்பேறு; பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை!

சென்னையில் பெருவெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

PT WEB

மிக்ஜாம் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மடிப்பாக்கம் குபேரன் நகரும் ஒன்று. குபேரன் நகரில் இன்றே இடுப்பளவுக்கு தண்ணீர் இருக்கும்நிலையில், கடந்த 5ஆம்தேதி இங்கிருந்த நிலையை சொல்லவே வேண்டியதில்லை. அந்தச் சமயத்தில்தான் நிறைமாத கர்ப்பிணியான கற்பகத்தின் குடும்பத்தினர் சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் உதவி கோரினர். அவர் மிகுந்த முயற்சிசெய்து இரண்டரை மணிநேரம் போராடி தேசிய பேரிடர் மீட்புப்படையினரை வரவழைத்தார். இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கர்ப்பிணிப் பெண்ணான கற்பகத்தை மீட்டார்கள்.

போக்குவரத்து இல்லை, சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் என மிகவும் சிக்கலான தருணங்களை கடந்து, மடிப்பாக்கத்தில் இருந்து 45 நிமிடங்கள் பயணித்து பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கற்பகம் அழைத்துவரப்பட்டார். அங்கும் தண்ணீர் சூழ்ந்திருந்தநிலையில், இதுவரை பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல ஆயத்தமாயினர் கற்பகம் தம்பதியர். இதையடுத்து ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் சேர்ந்த கற்பகத்திற்கு, கடந்த 6ஆம் தேதி காலை அழகான பெண் குழந்தை பிறந்தது.

முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை மாற்றுத்திறனோடு பிறந்ததோடு இறந்தும்விட்ட நிலையில், 4 வருட காத்திருப்புக்குப்பின் பிறந்த இந்த குழந்தை, கற்பகம் தம்பதிக்கு பேரானந்தத்தைக் கொடுத்திருக்கிறது. புயலும், மழையும், வெள்ளமுமான இயற்கைப் பேரிடர் நேரத்தில் கற்பகம் தம்பதியின் வாழ்க்கையில் வசந்தத்தை தவழவிட்டிருக்கிறது இந்த குழந்தை..