தமிழ்நாடு

போர்க்குணம் மிகுந்த ப்ரீத்தி 471 மதிப்பெண் எடுத்து சாதனை!

போர்க்குணம் மிகுந்த ப்ரீத்தி 471 மதிப்பெண் எடுத்து சாதனை!

webteam

எலும்பு வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்டபோதிலும், தன்னம்பிக்கையால் அனைவரின் கவனத்தையும், அன்பையும் பெற்று, மனதில் நீங்காத இடத்தை பெற்ற உயிரிழந்த மாணவி ப்ரீத்தி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ப்ரீத்தியை நேரிலோ, செய்தியின் வாயிலாகவோ அறிந்தவர்களுக்கு மட்டுமே அவரின் போர்க்குணம் தெரிய வரும். சிறு வயதிலேயே எலும்பு வளர்ச்சியின்மை என்ற நோயால் பாதிக்கப்பட்ட ப்ரீத்தி, கல்வி மட்டுமே தன்னுடைய வாழ்வையும் , குடும்பத்தின் சூழலையும் மாற்றும் என்ற ஒற்றை கனவை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார். தாயின் அரவணைப்பும் , ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் சேர்ந்து தன்னம்பிக்கையுடன் படித்த ப்ரித்தி, பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண்கள் பெற்றார். பள்ளி, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் முயற்சியால், 11 ஆம் வகுப்பை தொடர்ந்த ப்ரித்தி, கடந்த ஆண்டு புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தபோது மாவட்ட ஆட்சியர் ஆகும் தனது லட்சியத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பள்ளி விடுமுறை நாட்களில் கூட படித்துக்கொண்டிருந்த ப்ரீத்தி, எலும்பு வளர்ச்சி முற்றிலுமாக தடை பட்டு கடந்த 18 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில்தான் நேற்று வெளியான 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ப்ரித்தி 471 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.தமிழ், க‌ணக்குப்பதிவியலில் 93 மற்றும் 94 மதிப்பெண்களும், கணினி அறிவியலில் 88 வணிகக்கணிதத்தில் 74 என அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார் ப்ரித்தி.தடைகளை கடந்து சாதிக்கத் துடித்த ஒரு பெண்ணின் போராட்டம் பாதியில் முடிந்துவிட்டாலும், அவர் விதைத்துச் சென்றுள்ள நம்பிக்கை விதை, மற்றவர்களை தூண்டும் சக்தியாக இருந்து கொண்டே இருக்கும்.

(தகவல்கள்: ஐஸ்வர்யா, செய்தியாளர்)