தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெருங்கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்க போதிய இடங்கள் கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே-10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்றிருக்கின்றன.
ஏற்கனவே, காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருக்கின்றன. எனினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றாலே அது கூட்டணியில் இணைந்துவிட்டது போலதான் என அரசியல விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் தான், தவெக தலைமையிலான தங்கள் கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
இந்நிலையில், சி.வி. சண்முகம் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையே தேவை என்பதால், தவெக வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. எனினும், தவெக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? அல்லது காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்”
இந்தசூழலில் தான், தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு ’தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என அழைத்திருக்கும் எக்ஸ் தளப்பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், தவெக தலைமையிலான கூட்டணி உறுதியாகிவிட்டதா எனவும் கேள்வி எழுந்திருக்கிறது.
எனினும், சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. சண்முகம் பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ”புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.