சென்னையில் வடிகால் அடைப்பை அகற்றி மழைநீரை வடிய செய்த, போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
சென்னையில் பல இடங்களில் நேற்று முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையிலும் மழை காரணமாக மழை தண்ணீர் தேங்கியது. குறிப்பாக நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலையம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டது. சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு மழை நீர் தேங்கி கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர்புரம் காவலர் திருமலை, போக்குவரத்து நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜேஷ் மற்றும் மகாதேவன் ஆகியோர் கைகளாலேயே மழை நீர் வடிகால் அடைப்பை உடனடியாக சரி செய்தனர். செய்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் பலர் போக்குவரத்து காவலர்களை வெகுவாக பாராட்டி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டை பெற்று வருகிறது.