பிரதீப் ஜான் முகநூல்
தமிழ்நாடு

“இங்கெல்லாம் தீவிரமாக மழை பெய்யும்...” - சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் போட்ட பதிவு!

டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால், நவம்பர் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘ஆரஞ்ச் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தவகையில், டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்டா மாவட்டங்களில் மழையானது இன்று (திங்கட்கிழமை 25 ஆம் தேதி) இரவு தொடங்கி, நாளை நாளை மறுநாள் (நவ 26, 27) ஆகிய தேதிகளில் தீவிரமாக பெய்யும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், நாகை, காரைக்கால, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும். 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து புதியதலைமுறைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இன்றைய சூழலை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை என்பது உறுதியாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை 27 ஆம் தேதி வரை மழை தொடரும். இப்போதைய சூழலில், காற்றழுத்தம் என்பது வலுப்பெறும் நிலையில், அடர் மேகங்கள் வடதமிழக கடலோரப் பகுதியிலேயே மையம் கொள்ளும் பட்சத்தில் நவம்பர் 27, 28 , 29, 30 என தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் மழைப்பெய்வதற்கான வாய்ப்பு என்பது உள்ளது.

சென்னையை பொறுத்தவரை நீர் தேவை என்பது அதிகம் உள்ளது. பூண்டியில் 15%-தான் மழைப்பொழிவு என்பது இருக்கிறது. எனவே, டிசம்பர் மாதத்திற்கான மழை பொழியாத பட்சத்தில் இந்த மழை மிக முக்கியமான ஒன்றாக எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.