தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய தலைமுறையிடம் பேசிய சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், “சென்னையில் விட்டு விட்டு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேகங்கள் மீண்டும் உருவாகி வரும் நிலையில், சில மணி நேரங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மாலை வரையே விட்டு விட்டு சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மன்னார் வளைகுடா, தென் தமிழகம் வழியாக கேரள செல்வதைப் பார்க்க முடியும். இதன் காரணமாக இன்று இரவு முதல் தென் தமிழகத்திற்கு நல்ல மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ராமேஸ்வரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை காலை வரை கனமழை இருக்கும். காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலுக்குள் சென்றபின் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நிலப்பகுதி வழியாகவே செல்வதால் புயலாக வலுப்பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. கொடைக்கானல் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.