NLC
NLC PT Web
தமிழ்நாடு

'மின்சாரத்தின் இருண்ட முகம்' - நிலத்தடி நீரில் 250 மடங்கு அதிகமான பாதரசம்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

PT WEB

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்துப் பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு போன்றோர் கலந்து கொண்டனர். மேலும் சுல்தான் இஸ்மாயில், மண் உயிரியலாளர். கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், ஸ்ரீபத் தர்மாதிகாரி, மந்தன் அத்யாயன் கேந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிக்கையினை வெளியிட்டனர்.

பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்தியாயன் கேந்திரா ஆகிய சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து நடத்திய ஆய்வு, 2022 தொடங்கி 2023 ஏப்ரல் வரை நடைபெற்றது. ஆதண்டார் கொல்லை, அகிலாண்ட கங்காபுரம், கல்லுக்குழி, தென்குத்து வானதிராயபுரம், வடக்கு வெள்ளூர், புது குப்பம் ஆகிய கிராமங்களில் 121 வீடுகளில் நேரடியாக நேர்காணல் செய்து பதில்களை பெற்று இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவில் என்எல்சி-யை சுற்றியுள்ள 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருப்பதும் 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாசடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக என்எல்சி-ன் ஒன்பதாவது சுரங்கத்திற்கு அருகே உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல பரங்கிப்பேட்டையில் ஐடிபிசிஎல் நடத்தி வரும் அனல் மின் நிலையத்திற்கு அருகே 2 கிராமங்களில் எடுக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில் மூன்று இடங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மண் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 30 மடங்கு போரான் அளவு அதிகமாக இருக்கிறது. அனல் மின் நிலையத்தில் உள்ள கழிவுகளில் இருந்து இந்த போரான் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண் தரம் மாறியுள்ளது. நீரில் மெக்னீசியம், சிலிக்கான், கடினத்தன்மை காரத்தன்மை போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “அனல் மின் நிலையத்தில் இருந்து வெளி வரும் நிலக்கரி சாம்பல் உடல்நலனுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நுரையீரல் பிரச்னைக்கு வழிவகுக்கும். நிரந்தர பணி, வேலை வாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் காற்றோடு காற்றாக மாசாக கலந்திருக்கிறது. கடலூர் மாவட்டமே என்.எல்.சியால் பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் சார்ந்த நோய்கள் ஏற்படுகிறது. மூச்சுத்திணறல் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படுகிறது.

சிப்காட், என்.எல்.சி, பரங்கிப்பேட்டை அனல் மின் நிலையம் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. நெய்வேலியில் 250 மடங்கு நிலத்தடி நீரில் பாதரசம் உள்ளது. வாழ்விடத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கூட்டணி கட்சியில் இருக்கும் நான் எம்எல்ஏவாக ராஜினாமா செய்ய தயார். ஆனால் NLC நிறுவனம் மூடப்படுமா? நானும் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறேன். தமிழக அரசின் திட்டக்குழுவில் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் இருக்கிறார். மக்களின் பாதிப்புகளை தொடர்ந்து எடுத்து வைத்து வருகிறோம். மக்களை பற்றி கவலை கொள்ளாத நிறுவனமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஒட்டு மொத்த டெல்டாவும் பாதிப்படையும். பருவமழை காலம் மாறிவிட்டது. இயற்கை நேர் மாறான பிரச்னைகளில் தவித்து வருகிறது. மற்ற மாநிலங்களில் புறக்கணிக்கும் திட்டங்கள், தமிழ்நாட்டில் செயல்படுத்த படுகிறது” என்றார்.

‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ அறிக்கையை, இங்கே முழுமையாக காணலாம்:

Pollution.pdf
Preview